வெள்ளிமணி

செய்வினை நீக்கும் மதுரகாளி

அந்தப் பகுதி மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தாள் செல்லியம்மன்.

அ.கு. பார்வதி

அந்தப் பகுதி மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தாள் செல்லியம்மன். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து வரப் பிரசாதியாகத் திகழ்ந்த செல்லியம்மனை தன் மாயத்தால் மயக்கினான் மந்திரவாதி ஒருவன். அவனுக்கும் அவன் கேட்ட வரங்களை அள்ளி வழங்கினாள் செல்லியம்மன். அதனால், அந்த மந்திரவாதி செல்லியம்மனுக்கே தீங்கு எண்ணத் தொடங்கினான். அவன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவளாய் செல்லியம்மன் இருக்கும் நிலை ஏற்பட்டது.
 அதே நேரம், ஒரு சிலம்புக்காக தன் கணவன் கோவலனைத் திருட்டுக் குற்றம் சுமத்திக் கொன்றதால், ஆவேசமடைந்த சிலப்பதிகார கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரையை எரித்தாள். அந்த ஆவேசம் அடங்காமல் சோழ நாட்டில் சுற்றித் திரிந்தாள். செல்லியம்மன் குடியிருக்கும் பகுதிக்கு வந்ததும் தன் மனம் அமைதியுற்றதை உணர்ந்தாள். எனவே செல்லியம்மனிடம், தான் அங்கே தங்க விரும்புவதைக் கூறினாள்.
 செல்லியம்மனோ, ஒரு மந்திரவாதியால் தான் படும் கஷ்டத்தைக் கூறினாள். அதைக் கேட்ட கண்ணகி, மந்திரவாதியை அழிக்குமாறு காளியிடம் வேண்டினாள். பின்னர் செல்லியம்மனை வேறு இடத்துக்குச் சென்றுவிடுமாறு கூறினாள். அதன்படி, செல்லியம்மன் இருந்த கோயிலில் காளி குடிகொள்ள, அவள் கண்ணகியுடன் அருகில் உள்ள பெரியசாமி மலைக்குச் சென்றுவிட்டாள். வெள்ளிக்கிழமை அன்று இரவு மந்திரவாதியை காளி சம்ஹாரம் செய்தாள். பின்னர் செல்லியம்மன் காளியை அந்தக் கோயிலிலேயே இருந்து அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொள்ள, மதுரகாளியம்மன் அங்கே கோயில் கொண்டு அருள்புரியலானாள். செல்லியம்மன் மீண்டும் பெரியசாமி மலைக்கே சென்று விட்டாளாம். இன்றும் இங்கே வரும் பக்தர்கள், மலையில் இருக்கும் செல்லியம்மனையும் தரிசித்துவிட்டே செல்கின்றனர்.
 இருப்பினும் செல்லியம்மன் கேட்டுக் கொண்டபடி, கோயிலில் அவளுக்கே முதல் மரியாதை. பூஜையின் போது முதலில் செல்லியம்மனுக்கு தீபாராதனை காட்டி விட்டே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுகின்றனர். ஒரு வெள்ளியன்று மதுரகாளியம்மன் இந்தக் கோயிலில் வந்தமர்ந்தாள் என்பதால், திங்கள், வெள்ளியன்று மட்டும் பக்தர்களுக்கு அம்மன் காட்சி தருகிறாள். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
 இக்கோயில் சுமார் 1000 வருடங்கள் பழைமையானது. மருதமரம் தல விருட்சம். பக்தர்கள் இங்கே மாவிளக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஆலயத்தின் உள்ளே உள்ள ஓர் உரலில் மாவு இடித்துப் பிணைந்து நெய்யிட்டு மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். இத் தலத்தில் திருமணமாகாதவர்கள் ஈரத் துணியுடன் அங்கப் பிரதட்சினம் செய்து, மாவிளக்கு ஏற்றினால் திருமணம் கைக்கூடும். குழந்தை வரம் கிடைக்கவும், உடல் உபாதை தீரவும், பில்லி, சூனியம் அகலவும் அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
 திருச்சி- பெரம்பலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

SCROLL FOR NEXT